Monday, September 18, 2017

என்ன தவம் செய்தேனோ?



என் முகம்  அறியா முதல் முகநூல்  வாசகி முழுநிலாவின் தொடர்ந்த உற்சாக விமர்சனங்கள்  இன்று என்னை பெரிய எழுத்தாளராக மாற்றிவிட்டது.

வாழ்க முழுநிலா.விமர்சனத்தால் என்னை கட்டிபோட்டவள்.அவளை நேரில் ஒரு முறையேனும் கண்டு நன்றி சொல்ல ஏங்குகிறேன்.

ஆனால்....

என் மகன். நான் எழுதுவதற்கு அவனும் ஒரு காரணம்.அம்மா அப்பாவிடம் பாசமும் மரியாதையும் உள்ளவன்தான்.

 தேர்வுக்கு படிக்கையில் நடுநடுவே    ப்லேஸ்டேஷன்  விளையாடுவதை  பார்க்கையில் என்கண்கள் குளமாகின்றன. அவனிடம்  நானும் அவன் தந்தையும் எவ்வளவோ எடுத்துச்  சொல்லியும் பத்தாம் வகுப்பில் படிக்கின்றோம் என்ற பொறுப்பு சிறு துளியும் அவனுக்கு வரவில்லை.

குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் தவறான செயல்கள் என்பதனை நன்கு உணர்ந்தவள் நான் என்பதால்  பொறுமை எல்லை மீறும் சந்தர்ப்பங்களில்  கண்ணீர் பெருக்கெடுத்துவிடுகின்றது.

பூஜை அறையை தன்னிச்சையாக கால்கள் அடைந்தன. கடவுளே என் மகனை பொறுப்புள்ளவனாக மாற்றிவிடு. வழக்கம்போல் மனம் கிடந்து அரற்றியது.

இவனுக்காக நான் வேலைக்கு கூட போகாமல் மகனே உலகம் என்றல்லவா வாழ்கிறேன். ஓரளவு இலக்கியம் கற்றவள் நான்.

போன வருடம் இவனை நினைத்து கவலைப்பட்டு மனரீதியில் சற்று பாதித்து நினைவாற்றல் குறைய ஆரம்பித்ததும்  என் கணவர் மீண்டும் நீ எழுது என்று
ஊக்குவிக்க ஒரே மாதத்தில் இணையத்தில் எழுத ஆரம்பித்தேன்.

எழுத்துலகம் இனிமையானது.என் மனதை குளிரவைத்துவிடுகின்றது.
ஒருவேளை.... சென்ற வாரம்  பதிவிட்ட  என்  கவிதைக்கு முழுநிலாவின் விமர்சனம் வந்திருக்குமோ? என்று ஆவல் மனதில் தோன்ற என் கணினி வேலை செய்யாததால்....


என்  மகனின்  கணினியை   திறந்தபோது மூடாது வைத்திருந்த அவனின்
முகநூல் பக்கத்தை கண்டதும்
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.

"அருண்"குரல் தடுமாற நான் அழைத்ததும்
"அம்மா என்னம்மா" ஓடிவந்த என் மகன் ஒரு நொடியில் புரிந்துகொண்டான்
"சாரிம்மா...வந்து... முழுநிலா நான்தான் உங்களை ஊக்குவிக்க இப்படி செய்தேன்"என்றான்

பெருமிதத்தில் கண்கள் குளமாகின.தாயை வளர்க்கும் பிள்ளையல்லவோ இவன்?ஊக்கமளிக்கும் வார்த்தைகளின் வலிமையை எனக்கு   நிஜத்தில் உணரவைத்தவன்.

"என்ன தவம் செய்தேனோ  உன்னை பெற?" ஆரத்தழுவி நான் சொன்ன  வார்த்தைகளால் என் மகனின் கண்களில் தெரிந்த உற்சாகம் அவனை உயர்த்தும் இனி.

No comments:

Post a Comment