மேக மூட்டமாய் வானம். இருள் சூழ்ந்த இரவு. மனதில் பாரம் பாறையாய் அழுத்த, கால்கள் தன்னிச்சையாய் கடல் மண்ணில் நடந்தது. சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் எதுவுமே கண்களில் பதியாமல் கண்ணீர் பெருகி வழிந்தது.
இனி எனக்கென்று யாருமில்லை இங்கே. இவ்வுலகில் எதற்காக நான் வாழவேண்டும். என் முடிவு இதோ இன்று இந்த கடலில் என்று திண்ணமாக்கி கொண்டு, கண்களை இறுக மூடி கடைசி மூச்சு காற்றை சுவாசித்துவிட்டு....
மூன்று மாதமாக மனைவியை இழந்த தனிமை. அலுவலகத்தில் கவனம் சிதறுவதால் வேலையை தொடரமுடியவில்லை. துன்பத்தை பகிர்ந்துகொள்ள முப்பது வருட திருமண வாழ்வில் ஒரு குழந்தை கூட பிறக்காததை நினைத்ததும் இன்னும் சுயபச்சாதாபம் கூடியது.
இனி எனக்கென்று யாருமில்லை இங்கே. இவ்வுலகில் எதற்காக நான் வாழவேண்டும். என் முடிவு இதோ இன்று இந்த கடலில் என்று திண்ணமாக்கி கொண்டு, கண்களை இறுக மூடி கடைசி மூச்சு காற்றை சுவாசித்துவிட்டு....
கடலில் மூழ்கிய தருணம்...
எங்கிருந்து வந்தனர் இத்துனைபேரும்?
என்னை காப்பாற்றி கரைசேர்த்தனர் மீனவர்கள்,
முதியவர் ஒருவர் என்னிடம் வந்தார். என் தலையை கோதி விட்டு பேசினார்...
"உங்க பிரச்சன இன்னானு கேக்கல ஆனா..ஒன்னு சொல்றன்...
சுனாமில என் குடும்பமே அடிச்சிக்கினு பூடுச்சு அதிலே இங்க இருக்கவங்க நிறைய பேருக்கு சொந்த பந்தங்களே இப்ப கெடையாது... பெத்தவங்க இல்லாம அனாதையான கொயந்தைங்களை நான் வளக்கறன்..
அவங்களுக்காக இதே கடலை கும்பிட்டு மறுபடியும் மீன்புடிக்கிறேன்..
சோதனைனு வந்தா... சாவுதான் முடிவுன்னா இந்த ஒலகம் பூராவும் பொணம்தான் இருக்கும்..."
முதியவர் பேசிக்கொண்டிருக்க, இந்த உலகம் நமக்கு என்ன செய்தது என்று ஏங்குவதை விட்டு.. இந்த உலகத்திற்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களால் இங்கு வாழ்வதற்கான அர்த்தங்களை தானே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது தெளிவாக புரிய ஆரம்பித்தது.
முதியவருக்கு நன்றி கூறி வணங்கி புறப்பட்டபோது என் மனதை போலவே வானத்திலும் மேகங்கள் விலகி முழு நிலவு ஒளிவீசி கொண்டிருந்தது.
No comments:
Post a Comment