Saturday, October 21, 2017

பக்தி

                         
என்றும் போல் சந்தனமும் குங்குமமும் மணக்க மீண்டும் ஒருமுறை தன் முகத்தை   கண்ணாடியில்  பார்த்து திருப்த்தி அடைந்துவிட்டு பூஜைஅறைக்குள் புகுந்தாள் சாந்தா.  மனம் ஒன்றி பூஜித்துவிட்டு...
"இறைவா! நீ எனக்கு அளித்த இந்த வாழ்க்கையினை பரிபூரணமாக நீ அளித்த வரமாக மட்டுமே ஏற்று வாழும் மனபக்குவத்தினை எனக்கு அருள்வாய்" பக்தியுடன்  வேண்டிக்கொண்டு....
சமையலறையில் பக்தி பாடல்கள் ஒலிக்க சமைத்துவிட்டு....

காலை உணவை தட்டுகளில் நிரப்பியதும்  ஆவலோடு  அள்ளி விழுங்கி கொண்டிருந்த பள்ளி சிறுவனான  தன்  மகனை பார்க்கையில்....
 விடுமுறை நாளிலும் பூஜை அறைக்கு கூட வராமல் சாப்பிட ஆரம்பிக்கிறானே மனம் அங்கலாய்த்தது...
இறைவா  என் மகனை மன்னித்து விடு மனதார வேண்டி கொண்டாள்.

பூஜை செய்துவிட்டு கம்ப்யூட்டரில் மெயில் பார்த்தவாறே சிற்றுண்டியை வாயில் போட்டதுமே "சட்னியில் உப்பே இல்லை" என்ற
கணவரின் வார்த்தைகள் சுருக்கென்று உரைக்க  தவறை உணர்ந்து
மன்னிப்பு கேட்டுவிட்டு உப்பை சேர்த்து விட்டு நிமிர்கையிலே தெளிவாக புரிந்தது....

தாயின்   குறைகளை  தன் வரமாகவே ஏற்கும் மகனின்  இந்த குணம்.... 
மிக உயர்ந்ததான தாய் மீது  இருந்த பக்தியை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?